Latest

latest

பேராவூரணி அருகே பல நூற்றாண்டுகள் பழமையான துறைமுக நகரம் கண்டுபிடிப்பு...

Peravurani Town :

/ by IT TEAM

பேராவூரணி பகுதியில்  பண்டைத் தமிழகம் என்பது சேர, சோழ, பாண்டிய நாடு என வழங்கப்பட்டு முடியுடை மூவேந்தர்களின் ஆட்சியின் கீழ் இருந்து வந்ததை சங்க இலக்கியங்களும் தொல்லியல் சான்றுகளும் தெரிவிக்கின்றன. நிலையான அரசாட்சி மட்டுமின்றி பொருளாதாரத்தை வளப்படுத்தக்கூடிய அயல்நாட்டு வணிகத்திற்கும் மூவேந்தர்கள் முன்னுரிமை அளித்துள்ளனர். மேற்குக் கடற்கரையிலும் கிழக்குக் கடற்கரையிலும்பல துறைமுகங்கள் இருந்துள்ளமைக்கு சங்க இலக்கியச் சான்றுகள் மட்டுமின்றி தொல்லியல் சான்றுகளும் கட்டியம் கூறுகின்றன.
வரலாற்றுத் தொடக்க காலத்தில் பிளைனி, தாலமி, பெரிப்ளூஸ் என்ற நூலின் ஆசிரியர் ஆகிய மேலை நாட்டினர் தமிழகத்தைக் குறித்து பல செய்திகளைத் தந்துள்ளனர்.

தமிழகத்தில் இருந்த புகழ்பெற்ற பல துறைமுக நகரங்களையும் வெளிநாட்டு வணிகத்தைக் குறித்தும் இவர்களது குறிப்புகள் மூலம் அறிய முடிகிறது. தமிழக வணிகர்களும் இத்துறைமுகங்களின் வழியாக கடல்கடந்து ரோமானிய நகரங்களுடனும் தென்கிழக்காசிய நாடுகளுடனும் வணிகம் மேற்கொண்டனர்.

தமிழ் எழுத்துப் பொறித்த பானை ஓடுகள் செங்கடல் பகுதியில் உள்ள பெரினிகே, குஸீர் அல் குதாம், கோர்ரோரி ஆகிய இடங்களில் கிடைத்துள்ளன. பொது ஆண்டு முதலாம் நூற்றாண்டில் முசிறி வணிக ஒப்பந்தம் குறித்த பேப்ரஸ் காகித கிரேக்க மொழி ஆவணம் ஒன்று வியன்னா அருங்காட்சியகத்தில் உள்ளது. எனவே தமிழகம் மிகச்சிறந்த வணிகத் தலமாக அக்காலத்தில் இருந்தது என்பதை அறிய முடிகிறது.
கீழைக் கடற்கரைத் துறைமுகங்களாக காவிரிம்பூம்பட்டினம், நாகப்பட்டினம், கொற்கை ஆகிய புகழ்பெற்ற துறைமுக நகரங்கள் மட்டுமின்றி பல சிறிய துறைமுகங்களும் அக்காலத்தில் இருந்துள்ளன. அத்தகைய துறைமுகங்களிலிருந்தும் வெளிநாடுகளுக்கு பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. கிழக்குக் கடற்கரையில் பந்தர் என்ற துறைமுக நகரத்தை சங்க இலக்கியமான பதிற்றுப் பத்து குறிப்பிடுகின்றது.
இந்நகரம் அணிமணிகளுக்குப் புகழ்பெற்ற நகரமாக இருந்துள்ளது. பந்தர் என்னும் பெயரில் சோழநாட்டில் மணல்மேல்குடிக்கு அருகில் உள்ள ஊர் பந்தர் பட்டினம். பந்தர் என்னும் அராபியச் சொல்லுக்கு பண்டகசாலை உள்ள ஊர் என்பது பொருள். ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் கடல் வழியாக வந்த கலன்களில் (கப்பல்கள்) இறக்கப்படும் ஏற்றப்படும் பொருட்கள் வைக்கப்படும் பண்ட சாலைகள் உள்ள நாட்டிற்குத் தலைவன் எனக் குறிக்கப்படுகின்றான்.

பந்தர்பட்டினம் என்னும் பெயரில் தற்பொழுது தஞ்சாவூர் மாவட்டத்தில் பேராவூரணி அருகில் மீன்பிடிக்கும் சிறிய கடற்கரை ஊராக விளங்குகிறது. இவ்வூர் தஞ்சாவூர் மாவட்டத்தில் பேராவூரணி வட்டத்தில் திருவத்தேவன் ஊராட்சிக்குட்பட்ட மீனவர் பட்டினமாக தற்பொழுது விளங்கி வருகின்றது. இவ்வூர் தற்பொழுது மந்திரிப்பட்டினம் என்றும் பெயரில் வழங்கப்படுகிறது.

இவ்வூரின் வடக்கில் உள்ள செந்தலைப்பட்டினம் அருகிலும் தெற்கிலுள்ள சுப்பம்மாள் சத்திரப் பகுதியிலும் ஊரின் மையப்பகுதியிலும் தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல் துறையினர் 2015 ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் அகழாய்வுகள் மேற்கொண்டனர். மொத்தம் 8 குழிகள் இடப்பட்டதில் மந்திரிப்பட்டினம் வரலாற்றுத் தொடக்க காலம் முதல் 14ஆம் நூற்றாண்டுவரை ஒரு துறைமுக வணிக ஊராக இருந்து வந்துள்ளதை அறிய முடிகிறது.
இவ் அகழாய்வில் சேரர்கள் சங்க காலத்தில் வெளியிட்ட வில் பொறித்த சதுரக் காசும் இடைக்காலச் சோழர்கள் வெளியிட்ட செப்புக்காசுகளும் கிடைத்துள்ளன. தமிழகத்தில் நடைபெற்ற அகழாய்வுகளில் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் சங்க கால சேரரின் வில் பொறித்த சதுரக்காசு கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும். அதேபோன்று இடைக்காலச் சோழர்களின் செப்புக் காசுகளும் விஜய நகர கால வெள்ளிக்காசு ஒன்றும் கிடைத்துள்ளன.

இந்த அகழாய்வில் மிகுந்த அளவில் காசுகள் கிடைத்திருப்பதால் இவ்வூர் இடைக்காலச் சோழர்களின் காலத்தில் முக்கிய துறைமுக நகரமாக இருந்துள்ளதை அறிய முடிகிறது.
மேற்குறித்த நாணயங்களைத் தவிர இவ் அகழாய்வில் அதிக அளவில் பல வண்ணங்களால் ஆன அருமணிகள் கிடைத்துள்ளன. எனவே இப்பகுதியிலிருந்து மணிகள் ஏற்றுமதி செய்யப்பட்டிருத்தல் வேண்டும் என்பதையும் அறிய முடிகிறது.
அகழாய்வில் குடிநீரை வடிகட்டும் சுடுமண்ணால் ஆன குழாய்கள் 6 அடி நீளத்தில் இரண்டு குழிகளில் கிடைத்துள்ளன. ஒரு குழியில் தண்ணீர் சேமிக்கும் பானை ஒன்றும் கிடைத்துள்ளது. இப்பகுதியில் குடிநீருக்கான ஏரிகள் மிகுந்து இருப்பதால் இவ்வேரிகளிலிருந்து நெடுந்தொலைவிலிருந்து வரும் கப்பல்களுக்கும் மரக்கலங்களுக்கும் தேவையான குடிநீர் மற்றும் உணவுப் பொருட்களும் இத்துறைமுகத்தின் வழியாக ஏற்றப்பட்டிருத்தல் வேண்டும்.
இவ் அகழாய்வில் தூய தங்கத்தின் துண்டு ஒன்றும் சிறிய அளவில் பொன் துகள்களும் கிடைத்துள்ளன. சுடுமண்ணாலான எருதின் தலை ஒன்றும் செம்பாலான நீண்ட ஊசி, சுடுமண் மணிகள், காதணிகள், பெண்கள் விளையாடும் பானை வ

No comments

Post a Comment

Don't Miss

News Ticker

© all rights reserved
Developed by Arun Kumar