Latest

latest

பேராவூரணி அருகே திருட்டு போன ஐம்பொன் அம்மன் சிலை மீட்பு.

Peravurani Town :

/ by IT TEAM
தஞ்சை மாவட்டம் பேராவூரணிஅருகே துறையூரில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 150 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஐம்பொன் அம்மன் சிலை இருந்தது. திருவிழா காலங்களில் வீதிஉலாவாக கொண்டு செல்ல மட்டும் இந்த சிலை பயன்படுத்தப்பட்டு வந்தது. திருவிழா முடிந்தவுடன் இரும்பு பாதுகாப்பு பெட்டகத்தில் சிலை வைக்கப்பட்டு, தரைதளத்தில் உள்ள சிறப்பு அறையில் வைத்து பூட்டப்படுவது வழக்கம். இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 25-ந் தேதி அதிகாலை 3 மணி அளவில் கோவில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் இரும்பு பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த ஐம்பொன் அம்மன் சிலையை திருடி சென்றுவிட்டனர். இவற்றின் மதிப்பு ரூ.1 கோடி ஆகும். இது குறித்து சேதுபாவாசத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. தனிப்படை தஞ்சை மாவட்டத்தில் உள்ள பழமைவாய்ந்த கோவில்களில் திருட்டு போன ஐம்பொன் சிலைகளை கண்டுபிடிக்கவும், திருடி சென்றவர்களை பிடிக்கவும் போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்தநிலையில் தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை நியூ பாத்திமா நகரை சேர்ந்த வாலிபர் ஒருவர் ஐம்பொன் சிலையை விற்க முயற்சி செய்து வருவதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சூப்பிரண்டின் நேரடி கண்காணிப்பில் உள்ள தனிப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் சிலைய விற்க முயற்சி செய்வது நியூ பாத்திமாநகரை சேர்ந்த கணேசன் மகன் ரமேஷ்(வயது26) என்பது தெரியவந்தது. உடனே அவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தஞ்சை பகுதியில் காரை கடத்திய ரமேஷ் தனது கூட்டாளிகளான கும்பகோணத்தை சேர்ந்த தமிழ்ச்செல்வம், முருகானந்தம் ஆகிய 2 பேருடன் சென்று துறையூர் முத்துமாரியம்மன்கோவிலில் இருந்த ஐம்பொன் அம்மன் சிலையை திருடியதும், அந்த சிலையை விற்பனை செய்வதற்காக திருச்சியில் உள்ள தனது நண்பர் வீட்டில் பதுக்கி வைத்திருப்பதும் தெரிந்தது. சிலை மீட்பு இதை தொடர்ந்து தனிப்படை போலீசார் திருச்சிக்கு விரைந்து சென்று ரமேசின் நண்பர் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ஐம்பொன் அம்மன் சிலையை மீட்டனர். பின்னர் ரமேசையும், சிலையையும் அதிராம்பட்டினம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து ரமேசை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய தமிழ்ச்செல்வம், முருகானந்தம் மற்றும் திருச்சியை சேர்ந்த வாலிபர் ஆகிய 3 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். ரமேஷ் மீது கார் கடத்தல் வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது. திருட்டு போன சிலை மீட்கப்பட்டதை அறிந்த துறையூரை சேர்ந்த மக்கள் திரண்டு வந்து சிலையை பார்த்து, அது முத்துமாரியம்மன் கோவி லில் திருட்டு போன அம்மன் சிலை என்பதை உறுதி செய்தனர்.

No comments

Post a Comment

Don't Miss

News Ticker

© all rights reserved
Developed by Arun Kumar