Latest

latest

ஆதார் எண் இருந்தால் மட்டுமே விவசாயிகள் உரம் வாங்கலாம் ஜூன் 1 முதல் அமல்.

Peravurani Town :

/ by IT TEAM

தஞ்சை மாவட்டத்தில் ஜூன் 1ம் தேதி முதல் ஆதார் எண் உள்ள விவசாயிகள் மட்டுமே மானியத்துடன் உரம் வாங்க முடியும். தஞ்சை கலெக்டர் அண்ணாதுரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மத்திய அரசு வழங்கும் உர மானியம் நேரடியாக விவசாயிகளுக்கு சென்றடையும் வகையில் தஞ்சை மாவட்டத்தில் வரும் ஜூன் 1ம் தேதி முதல் நேரடி உர மானிய முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதன்மூலம் விவசாயிகள் தங்கள் ஆதார் எண் மூலமாகவே உரம் வாங்க முடியும். இம்முறை மூலம் மானிய விலையில் விற்கப்படும் உரங்கள் விவசாயிகளை மட்டுமே சென்றடைவதையும், உரக்கடத்தலை தவிர்ப்பதையும் உறுதி செய்ய முடியும். தஞ்சை மாவட்டத்தில் வரும் ஜூன் 1ம் தேதி முதல் உரங்கள் அனைத்தும் பாயிண்ட் ஆப் சேல் கருவி மூலம் ஆதார் எண் உள்ள விவசாயிகளுக்கு மட்டுமே விற்பனை செய்யப்படும். மேலும் உர நிறுவனங்கள், மொத்த விற்பனையாளர்கள் பாயிண்ட் ஆப் சேல் கருவி உள்ள சில்லரை உர விற்பனையாளர்களுக்கு மட்டுமே உர விற்பனை செய்ய இயலும். தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து சில்லரை உர விற்பனையாளர்கள், தனியார் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளின் செயலாளர்களுக்கு மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி நேரடி உர மானியம் வழங்கும் பொருட்டு பாயிண்ட் ஆப் சேல் கருவி பொருத்தி உரங்களை விற்பனை செய்யும் அறிமுக பயிற்சி கடந்த 3 நாட்களாக நடந்து வருகிறது. கடந்த 17, 18ம் தேதிகளில் தஞ்சை, பட்டுக்கோட்டை, கும்பகோணம் சரக சார் பதிவாளர்களுக்கு உட்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலாளர்களுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டு இந்நாள் வரை தலா ரூ.27,500 மதிப்புள்ள பாயிண்ட் ஆப் சேல் கருவிகள் வழங்கப்பட்டுள்ளது. இன்று (19ம் தேதி) மாவட்டத்தில் உள்ள உரிமம் பெற்ற தனியார் சில்லரை உர விற்பனையாளர்களுக்கும் அனைத்து வேளாண்மை உதவி இயக்குனர், வேளாண்மை அலுவலர்களுக்கும் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. எனவே பிஓஎஸ் கருவி உள்ள சில்லரை உர விற்பனையாளர்கள் மட்டுமே உரங்களை விநியோகம் செய்ய இயலும். எனவே விவசாயிகள் உரம் வாங்க செல்லும்போது அவரது ஆதார் எண் இந்த கருவியில் பதிவு செய்யப்பட்டு அவரது விரல் ரேகையை பதிவு செய்தால் மட்டுமே மானிய விலையில் உரம் கிடைக்கும். இதன்மூலம் விவசாயி மானியத்தில் உரம் பெற்ற விவரம் மானிய கணக்கில் பதிவாகும். விவசாயிகள் உரக்கடையில் உரம் பெறும்போது மானியம் போக மீதித்தொகையை மட்டும் அளித்தால் போதும். மாவட்டம் முழுவதும் ஜூன் முதல் தேதி முதல் விவசாயிகள் உரம் வாங்குவதற்கு ஆதார் எண் மற்றும் விரல் ரேகை பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பிஓஎஸ் கருவி உள்ள சில்லரை உர விற்பனையாளர்கள் மட்டுமே உரங்களை விநியோகம் செய்ய இயலும். இவ்வாறு கலெக்டர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

No comments

Post a Comment

Don't Miss

News Ticker

© all rights reserved
Developed by Arun Kumar