Latest

latest

நீலகண்ட விநாயகர் வரலாறு சிறப்பு ...

Peravurani Town :

/ by IT TEAM

காயாத ஊருணிகள் நிறைந்து வளம் பொங்கும் ஊரென (பெயரா ஊருணி) பொருள்படும் பேராவூரணியில் பிரமாண்டமாக விரிந்து கிடக்கும் ஊருணிக் கரையொன்றில் இருக்கிறது இப்பழமையான கோயில். முடப்புளிக்காடு கிராமத்தில் வசிக்கும் சங்கரர் வகையறாக்களைச் சேர்ந்த மக்கள் சிறிய அளவில் வைத்து வணங்கிய இக்கோயில், திருநீலகண்டனின் மகிமையால் இன்று பிரமாண்டமாக பெயர் பரவி பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது.
தஞ்சாவூரை ஆண்ட மராட்டிய மன்னர் துளசி மகாராஜா, தீவிர தெய்வ பக்தி கொண்டவர். தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல கோயில்களை புனரமைத்தவர்.
அவரின் அன்புக்குப் பாத்திரமான தலைமை மந்திரிக்கு தீராத நீரிழிவு நோய் இருந்தது. நாட்டின் பல வைத்தியர்களிடம் சிகிச்சைப் பெற்று பார்த்தார்; நோயின் கடுமை குறையவில்லை. தம் அமைச்சரின் துன்பத்தைக் கண்டு வருந்திய துளசி மகாராஜா, நாடெங்கும் இருக்கும் திறன் வாய்ந்த வைத்தியர்கள் பற்றி விசாரிக்க தம் பரிவாரத்துக்கு உத்தரவிட்டார். ஆவுடையார்கோயிலில் வைத்தியர் ஒருவர் இருப்பதாகவும் நீரிழிவு நோய்க்கு வைத்தியம் செய்வதில் வல்லவர் என்றும் செய்தி கிடைத்தது. இதையடுத்து, அமைச்சரை அழைத்துக் கொண்டு ஆவுடையார்கோயில் நோக்கி பயணித்தார் மன்னர். வழியில் பேராவூரணியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த வேளையில், வயற்பரப்பில், சிறுகுடில் ஒன்றில் குடியிருந்த நீலகண்ட பிள்ளையாருக்கு, சிவனடியார்கள் (சங்கரர்கள்) இருவர் பூஜைசெய்து கொண்டிருப்பதைக் கண்டார் மன்னர்.
உடனடியாக தம் பல்லக்கை நிறுத்தி, அமைச்சரை அழைத்துக் கொண்டு அந்த கோயிலுக்குச் சென்றார். பிள்ளையாரை மனமுருக வணங்கி, அங்கிருந்த சங்கரர்களிடம், தம் அமைச்சரின் நிலையைக் கூறி அர்ச்சனை செய்யும்படி கோரினார். சங்கரர்களும் பிள்ளையாரைப் பிரார்த்தித்து, அர்ச்சனை செய்து திரு நீறும், அறுகம்புல் பிரசாதமும் தந்தார்கள். திருநீறை அணிந்து, அறுகம்புல்லை சாப்பிட்ட சில நாட்களிலேயே, அமைச்சரின் நீரிழிவு நோய் முற்றிலுமாகக் குணமடைந்தது. தம் அமைச்சரின் நோயை நீக்கிய பிள்ளையாரின் மகிமையைக் கண்டு பரவசமடைந்த துளசி மகாராஜா , நீலகண்டரின் பெயரில் பல வேலி நிலங்களை எழுதிவைத்து, கோயிலையும் விரிவுபடுத்திக் கட்டினார்.
அன்று முதல் இன்றுவரை நீலகண்டரின் திருநீறையும் அறுகையும் அருமருந்தாக கருதுகிறார்கள் பக்தர்கள். தம் கருணையால் பக்தர்களின் நோய்களகற்றி, கேட்ட வரங்களை வாரி வழங்குகிறார் நீலகண்டர். இவரைத் தரிசிக்க மாநிலங்கள் கடந்தும் பக்தர்கள் வந்து குவிகிறார்கள். பிள்ளையார்பட்டியை அடுத்து, பிள்ளையாருக்கென்று பிரத்யேகமாக அமைந்துள்ள இக்கோயிலில் ஈசனின் குடும்பமே குடியிருப்பதாக ஐதீகம்.
தீராத வினைதீர்க்கும் திரு நீலகண்ட பிள்ளையார் நம்ப ஊர் குலதெய்வமாக விளங்குகிறது.

No comments

Post a Comment

Don't Miss

News Ticker

© all rights reserved
Developed by Arun Kumar