Latest

latest

தஞ்சை மாவட்டத்தில் சம்பா நாற்றுநடும் பணி தொடங்கியது.

Peravurani Town :

/ by IT TEAM

சம்பா சாகுபடி :
மேட்டூர் அணையில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிடப்படவில்லை. இதனால் ஆழ்குழாய் கிணறு மூலமே குறுவை சாகுபடி நடைபெற்றது. சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிடப்படுமா? என்று விவசாயிகள் எதிர்பார்த்து இருந்தனர்.

சுப்ரீம்கோர்ட்டு உத்தரவுப்படி தமிழகத்திற்குரிய தண்ணீரை கர்நாடக அரசு திறந்துவிட்டதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்தது. இதனால் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக கடந்த 20–ந்தேதி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இந்த தண்ணீர் கல்லணையை வந்தடைந்ததைத்தொடர்ந்து அங்கிருந்து கடந்த 24–ந் தேதி காவிரி, வெண்ணாறு, கல்லணைக்கால்வாய் ஆகியவற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதையடுத்து காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் சம்பா சாகுபடி பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். ஏற்கனவே சம்பா, தாளடி சாகுபடிக்காக நாற்று விட்ட விவசாயிகள் தற்போது நடவு பணிகளை தொடங்கியுள்ளனர்.

நாற்றுநடும் பணி 


தஞ்சையை அடுத்த அம்மன்பேட்டை பகுதிகளில் ஆற்றுப்பாசனத்தை நம்பி சாகுபடி நடைபெறும். தற்போது ஆறுகளில் தண்ணீர் வருவதால் அம்மன்பேட்டை பகுதியில் நேற்று நாற்றுநடும் பணி நடைபெற்றது. களிமேடு பகுதியில் சில இடங்களில் உழவு பணி நடைபெற்று, நாற்றங்கால் விடப்பட்டுள்ளது. ஆறுகளில் தண்ணீர் சென்றாலும் இன்னும் கால்வாய்களில் தண்ணீர் செல்லவில்லை. இதனால் தஞ்சை–பூதலூர் சாலையில் சம்பா சாகுபடி பணியை விவசாயிகள் தொடங்கவில்லை. ஆனால் தண்ணீர் வரும் என்ற நம்பிக்கையில் இயற்கை உரங்களை வயல்களில் கொட்டி வைத்துள்ளனர்.

இது குறித்து விவசாயிகள் கூறும்போது, பெரும்பாலான இடங்களில் கால்வாய்கள் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் ஆறுகளில் இருந்து கால்வாய்க்கு தண்ணீர் வருவது சிரமமாக இருக்கும். எனவே கால்வாய்களை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஆறுகளில் செல்லும் தண்ணீரை குளம், ஏரிகளில் நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

உரம் இருப்பு 


வேளாண்மைத்துறை அதிகாரிகள் கூறும்போது, தஞ்சை மாவட்டத்தில் சம்பா சாகுபடி பரப்பு 1 லட்சத்து 5 ஆயிரம் எக்டேரிலும், தாளடி சாகுபடி பரப்பு 25 ஆயிரம் எக்டேரிலும் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு அதிக அளவில் நேரடி நெல் விதைப்பும் நடைபெற்று வருகிறது. தற்போது வரை 25 ஆயிரத்து 400 எக்டேர் வரை நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்டுள்ளது. சம்பா சாகுபடிக்கு தேவையான உரம் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் சம்பா நாற்றுநடும் பணி தொடங்கி இருக்கிறது. பெரும்பாலான பகுதிகளில் நாற்று விடப்பட்டுள்ளது. இன்னும் சில தினங்களில் சம்பா சாகுபடி பணி மும்முரமாக நடைபெறும் என்றனர்.

No comments

Post a Comment

Don't Miss

News Ticker

© all rights reserved
Developed by Arun Kumar